மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, அதிமுக தலைமை அலுவலகத்தில், 8 அடி உயரத்தில் புதிய சிலை விரைவில் நிறுவப்பட உள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினர். கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதித்த அவர்கள், தலைமை அலுவலகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு பதிலாக புதிய சிலையை அமைப்பது என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்த சிலை, 8 அடி உயரத்திற்கு அமைக்கப்பட உள்ளது. வெண்கலத்தில் அமைய உள்ள இந்த சிலையின் எடை 800 கிலோ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் வடிவமைத்துள்ளார். அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர், இந்த சிலையை பார்வையிட்டு, தலைமை அலுவலகத்தில் நிறுவ ஒப்புதல் அளித்துள்ளனர். விரைவில் சிலை திறந்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.