2011 சட்டமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்துவிட்டது என்றும், வரும் தேர்தலிலும் அதே நிலைதான் தொடரும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் பகுதியில் அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 39 மக்களவை உறுப்பினர்களை வைத்துள்ள திமுக நாடளுமன்றத்தில் ஈழத்தமிழர்களுக்காக எதுவுமே பேசவில்லை என்று குற்றம்சாட்டினார். ஆட்சியில் இருந்த போதெல்லாம் தமிழக நலனை பாதுகாக்காமல், ஆட்சியில் இருந்து விலகிய பிறகு ஆளும் கட்சியை திமுக குறை கூறி வருகிறது என்றும், விவசாயிகள் நலனை குழி தோண்டி புதைத்தது திமுக ஆட்சி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். சட்டப்பேரவையை எப்போது கூட்டவேண்டும் என அரசுக்கு தெரியும் என்றும், எதிர்க்கட்சித் தலைவர் கூறும் போதெல்லாம் சட்டப்பேரவையை கூட்ட முடியாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.