வீரமரணமடைந்த ராணுவ வீரர் சிவசந்திரன்… ஒரு செய்தித் தொகுப்பு

தீவிரவாத தாக்குதலுக்கு பலியாகி, மண்ணிற்கு விடைகொடுத்து, இந்திய மக்களின் மனதில் குடியேறியவர் அரியலூர் மாவட்ட ராணுவ வீரர் சிவசந்திரன். அவர் குறித்த செய்தித்தொகுப்பை தற்போது பார்கலாம். அரியலூர் மாவட்டம் உடையர்பாளையத்தை அடுத்த கார்குடியை சேர்ந்த சின்னையன், சிங்காரவள்ளி தம்பதியரின் மகன் சிவசந்திரன். எம்.ஏ., பி.எட்., பட்டதாரியான இவர், சிறு வயது முதலே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர்.

கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய ராணுவப்படையில் சேர்ந்து பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்த சிவசந்திரன், தனது மனைவி, குழந்தை மற்றும் குடும்பத்தினருடன் தங்கி, கடந்த 7ஆம் தேதி மீண்டும் பணிக்காக திரும்பியுள்ளார். ராணுவ உடையில் கம்பீரமாய் சென்ற தனது கனவன், மூச்சு நின்று வீடு திரும்புவார் என எதிர்பார்க்கவில்லை என்கிறார் அவரது மனைவி காந்திமதி.

ஜம்மு காஷமீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதிகளின் பயங்கர குண்டு வெடிப்பு தாக்குதலில் நாட்டிற்காக வீரமரணம் அடைந்த இவர், தாக்குதலுக்கு சில மணி நேரம் முன்பு தனது மனைவியுடன் தொலை பேசியில் பேசியுள்ளார். அப்போது, தனது மகனின் நினைவு மனதில் ஓடிக்கொண்டே இருப்பதாகவும், அவனை பத்திரமாக பார்த்துக்கொள் எனவும் கூறியுள்ளார் சிவசந்திரன். கடைசியாக தன் கணவனை பார்க்கக்கூட முடியவில்லை என கதறும் கந்திமதியின் அழு குரல் மனதை உருகச் செய்கிறது.

தனது இறப்பிற்கு முன்பு, தனது மனைவியிடம் பேசிய அவர், குழந்தைகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறியுள்ளார். அவர் கடைசியாக பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் கூறி, கதறும் சிவசந்திரன் மனைவியின் அழுகை, கல்நெஞ்சையும் கரைசெய்கிறது.

நாட்டிற்காக தன் மகனை கொடுத்ததில் பெருமை அடைகிறேன் எனக்கூறும் சிவசந்திரனின் தந்தை, பிள்ளையை பறிகொடுத்து நாதியற்றவர்கள் ஆகிவிட்டோமே எனக்கூறி கதறுவது கண்களில் நீரை வரவழைக்கிறது.

நாட்டு மக்கள் நிம்மதியாக கண்ணுறங்க, எல்லையை பாதுகாத்து… தீவிரவாதியின் சூழ்ச்சிக்கு தன் உயிரை தியாகம் செய்த வீரர் சிவசந்திரன் நம் உள்ளங்களில் என்றும் வாழ்வார் என்பதில் சந்தேகமில்லை.

Exit mobile version