டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் காவல்துறைத் தலைமையகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு கும்பல் நுழைந்து மாணவர்கள் மீது கடுமையாகத் தாக்குதல் நடத்தியது. இதில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிசே கோஷ் உட்படப் பலர் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வன்முறையாளர்களைக் கைது செய்யக் கோரியும் மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. இதனால் பல்கலைக்கழக வளாகத்தில் காவல் படையினர் குவிக்கப்பட்டனர். மாணவர்களின் அச்சத்தைப் போக்குவதற்காகக் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். இருப்பினும் வன்முறையாளர்களைக் கைது செய்யக் கோரி டெல்லி காவல்துறைத் தலைமையகம் முன் அரசியல் கட்சித் தலைவர்கள், மாணவர்கள் என ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்துக் கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் மும்பை ஐஐடி மாணவர்களும் புனே திரைப்படக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.