ஒலிம்பிக்கில் செயற்கை நுண்ணறிவு ரோபோக்களை களமிறக்கும் ஜப்பான்

2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற உள்ளன. இதில் ரோபோ உதவியாளர்களை பெரிய எண்ணிக்கையில் களம் இறக்க ஜப்பான் ஆர்வம் காட்டி வருகிறது. விளையாட்டு உலகையும், தொழில்நுட்ப உலகையும் அசர வைக்கும் ஜப்பானின் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒலிம்பிக் ரோபோக்கள் குறித்து, இந்த செய்தித் தொகுப்பு விளக்குகிறது.

அடுத்த ஆண்டு ஜூலை மாதம் 24ஆம் தேதி ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்க உள்ளன. இந்த ஒலிம்பிக் போட்டியில், தங்கள் ரோபோக்களை காட்சிப்படுத்தும் மேடையாக ஜப்பான் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக் போட்டிக்காக என்றே தயாரிக்கப்பட்டு உள்ள ஜப்பானின் செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்கள், பார்வையாளர்களை வரவேற்பது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவது ஆகியவற்றில் தொடங்கி, ஆட்டக் களத்தில் ஈட்டிகள், வட்டுகள் போன்றவற்றை அப்புறப்படுத்துவது, ஆளுயர திரைகளை லாவகமாக இயக்குவது என்று, பல்வேறு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளன.

ஆளுயரத் திரையுடன் கூடிய ஒரு வகை ரோபோ, டோக்கியோ ஒலிம்பிக்ஸை நேரடியாகக் காணும் வாய்ப்பு இல்லாதவர்களின் பிரதிநிதியாக செயல்பட உள்ளது. இது ஒலிம்பிக் களத்திற்கு வந்துள்ள புதிய யோசனையாகும். இப்படி இன்னும் பல மட்டங்களில்
செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் மக்களை ஆச்சர்யப்படுத்தக் காத்துள்ளன.

நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக்கில், விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இந்த ரோபோக்களும் கவனிக்கப்பட வாய்ப்புகள் ஏற்படும். அதற்காக இவை கனிவான முகத்துடனும், இனிமையாகப் பழகும் பண்புடனும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் சந்திப்பில் ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.

மேலும் 2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் சின்னமாகக்கூட இரண்டு ரோபோக்களையே ஜப்பான் அறிவித்துள்ளது. நீலம், இளஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில், ஜப்பானின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா மோட்டர்ஸால் உருவாக்கப்பட்டுள்ள இவை, மிரைடோவா மற்றும் சொமைட்டி என்று பெயரிடப்பட்டுள்ளன. இவைகளின் சிறிய உருவங்களும், ஒலிம்பிக் விளையாட்டு அரங்குகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கைகள், கால்கள், தலை என உடலை மனிதர்களைப் போலவே அசைக்கும் இந்த ரோபோக்களின் கண்விழி இதய வடிவம் அல்லது ஸ்மைலியாக மாறக் கூடியது.

ஒலிம்பிக் அரங்குகளில் சில பெரிய ரோபோக்கள் மனிதனின் செயலை அப்படியே செய்து காட்டவும், சில ரோபோக்கள் மிரைடோவா மற்றும் சொமைட்டியின் அசைவுகளுக்கு ஏற்ப செயல்படவும் உள்ளன. இவற்றால் ஜப்பானின் இந்த ஒலிம்பிக் ரோபோக்கள் பார்வையாளர்களையும், குழந்தைகளையும் பெரிதும் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன.

Exit mobile version