ஜி20 மாநாடு: பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

ஜப்பானின் ஒசாகாவில் துவங்கியுள்ள ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். இந்தியா உள்ளிட்ட 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ள இந்த மாநாடு துவங்கியுள்ளது. மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை மோடி சந்தித்து பரஸ்பர உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேசி வருகிறார்.

மாநாட்டின் இடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசினார். மூன்று நாட்டு தலைவர்களும் ஒரேநேரத்தில் சந்தித்து பேசிய இந்த பேச்சுவார்த்தை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இடையேயான முத்தரப்பு சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய மோடி, ஜப்பான், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளின் முதல் எழுத்தை குறிப்பிட்டு ‘ஜெய்’ என்றும் அதற்கு அர்த்தம் வெற்றி என்றும் கூறினார். இதேபோல் மக்களவை தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதற்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். ஜப்பானில் 2வது முறையாக பிரதமராக வெற்றி பெற்றுள்ள அபேவுக்கு டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மக்களுக்கு ஆற்றிய பணிகளுக்கு அங்கீகாரமாக தேர்தலில் இருவரும் வெற்றி பெற்றுள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டார்.

இதேபோல் ஜி 20 மாநாடு துவங்குவதற்கு முன்பாக பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜார் பொல்சொனாரோ ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம் குறித்தும் தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். பிற நாட்டு தலைவர்களும் முக்கிய பிரச்னைகள் குறித்து தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.

Exit mobile version