ஜம்மு காஷ்மீரின் வரலாறு

ஜம்மு காஷ்மீர் மாநிலம், வடக்கிலும் கிழக்கிலும் சீனாவையும், தெற்கில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் பஞ்சாப்பையும், வடக்கிலும், மேற்கிலும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் பகுதிகளையும் எல்லையாகவும் கொண்டுள்ளது.

காஷ்மீர் – என்பது சமஸ்கிருத வார்த்தை. வறண்ட நிலம் – என்பது இதன் அர்த்தம்.

2000 ஆண்டுகளாக பல்வேறு அரசர்களால் காஷ்மீர் தனி நாடாக ஆளப்பட்டு வந்தது. முதலில் பவுத்தமும், 9ஆம் நூற்றாண்டில் சைவமும், 13ஆம் நூற்றாண்டில் இருந்து இஸ்லாமும் காஷ்மீர் மக்களின் பிரதான சமயங்களான உள்ளன.

ஜம்மு மற்றும் காஷ்மீர் பகுதியை மொகலாயப் பேரரசர் அக்பர் 1586 ஆம் ஆண்டில், தமது படைத்தலைவர்களான பகவன் தாஸ், முதலாம் இராமசந்திரா ஆகியோரை கொண்டு வென்றார்.

அக்பரால் காஷ்மீர் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதலாம் இராமசந்திரா, இந்து தெய்வமான ஜம்வா மாதாவின் பெயரில் ஜம்மு நகரை நிறுவினார்.

1780 ஆம் ஆண்டில் முதலாம் ராமச்சந்திராவின் வழித்தோன்றலான ரஞ்சித் தியோவின் மறைவுக்கு பின், ஜம்மு காஷ்மீர் பகுதி சீக்கியரான ரஞ்சித் சிங் என்பவரால் பிடிக்கப்பட்டது.

ரஞ்சித் சிங் காஷ்மீரை தனது தளபதியான குலாப் சிங்கிற்குக் கொடுத்தார். குலாப் சிங்கின் வழி வந்த ஹரிசிங் 1947ல் காஷ்மீரின் அரசராக இருந்தார். இந்திய சுதந்திரத்தின் போது காஷ்மீருக்கும் தனியாக சுதந்திரம் அளிக்கப்பட்டது.

காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, 1947, அக்டோபர் 20 அன்று பாகிஸ்தான் ஆதரவு பழங்குடிகள் காஷ்மீரில் அத்துமீறி நுழைந்து போரிட்டனர்.

காஷ்மீர் அரசர் ஹரி சிங், 1947 அக்டோபர் 26 ஆம் தேதி இந்தியாவின் தலைமை ஆளுனர் மவுண்ட்பேட்டனின் உதவியை நாடினார். இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு மவுண்ட்பேட்டன் காஷ்மீருக்கு உதவ சம்மதித்தார்.

இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து ஆனதும் காஷ்மீருக்கு அனுப்பப்பட்ட இந்திய வீரர்களுக்கு ஆக்கிரமிப்பை தடுக்க மட்டுமே உத்தரவிடப்பட்டது. பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரைக் கைப்பற்ற உத்தரவு இல்லை!.

அப்போது காஷ்மீர் விவகாரத்தை இந்தியா ஐ.நா.விற்கு கொண்டு சென்றது. பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பை விலக்கிக் கொண்டு, காஷ்மீரில் ஐ.நா. கண்காணிப்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, மக்கள் விரும்பும் நாட்டுடன் காஷ்மீர் இணைக்கப்பட வேண்டும் என்று இந்தியா சொன்னது.

பாகிஸ்தான் காஷ்மீரில் தான் கைப்பற்றிய பகுதிகளை விட்டு வெளியேற மறுத்து விட்டதால் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவில்லை.

இந்தியாவுடன் காஷ்மீரை இணைக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை ஒரு இடைக்கால ஏற்பாடு – என்று கூறிய அரசர் ஹரி சிங், ஷேக் அப்துல்லாவை காஷ்மீரின் நிர்வாகத் தலைவராக நியமித்தார். இப்படியாக காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.

இந்த சூழலில்தான் 1954ல் காஷ்மீருக்கான சிறப்புச் சட்டம் 35ஏ இயற்றப்பட்டது. இது அரசமைப்புச் சட்டப்பிரிவு 370ன் கீழ் ஏற்கப்பட்டது. இந்தச் சட்டம் இந்திய நாடாளுமன்றத்தில் இயற்றப்படாமல், குடியரசுத் தலைவர் அனுமதியால் அமலானதால் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வந்த நாளான மே 14, 1954 முதல் இருந்து அங்கு யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழ் வருவார்கள். மேலும், அப்போதில் இருந்து 10 ஆண்டுகள் வாழ்ந்தவர்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் நிரந்தர குடிமகனாக கருதப்படுவார்கள்.

35ஏ சட்டப் பிரிவால் காஷ்மீர் பல்வேறு சிறப்புச் சலுகைகளைப் பெற்று வந்தது. அந்த நிலை மத்திய அமைச்சரவைத் தீர்மானத்தால் இப்போது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு உள்ளது.

Exit mobile version