தனித்து காணப்படும் ஜம்மு காஷ்மீரின் சட்ட நடைமுறைகள்

இந்தியாவில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, ஜம்மு காஷ்மீரின் சட்ட நடைமுறைகள் தனித்து காணப்படுகின்றன. இந்திய பிரிவினையின் போது, ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், இந்தியா, பாகிஸ்தானுடன் சேராது, தனித்து சுயாட்சி நடத்த விரும்பினார். ஆனால் பாகிஸ்தான் படையெடுக்க, பயமுற்ற மன்னர் நிபந்தனைகளுடன் ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் 1947ல் இணைத்தார்.இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவின் படி பெருமளவில் மாநில சுயாட்சியை கொண்டுள்ளதாகும்.இந்திய நாடாளுமன்றத்தில், இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம் ஆகிய துறைகளை தவிர்த்து, மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லுபடியாகாது.

இந்தியாவில் உள்ள மாநிலங்களில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக் கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு.இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்துகள் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றால் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.

இறுதியாக கடந்த 2014 ஆம் ஆண்டு நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் முப்தி முகமது சயீதின் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சியை மாநிலத்தில் அமைத்தன.காஷ்மீர் வரலாற்றில் முதன்முறையாக பாஜக அப்போதுதான் ஆட்சியில் அமர்ந்தது. அன்றைய முதல்வரான முப்தி முகமது சயீது உடல் நலக்குறைவால் இறந்ததால், எம்.பி.யாக இருந்த மெகபூபா முப்தி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனிடையே, பாஜக மற்றும் பிடிபி கட்சிகளுக்கு இடையே விரிசல் அதிகரிக்க, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்தது.

பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத சூழலில், பாஜக, பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகிய மூன்றும், 3 துருவங்களாக நின்றன. இதனால், யாரும் ஆட்சியமைக்க முடியாததால், காஷ்மீரில் கவர்னர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.இந்நிலையில், தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தல், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், தீவிரவாத தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்ட அனந்த்நாக் மக்களவைத் தொகுதிக்கு மட்டும், இதுவரை இல்லாத வகையில் 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. மற்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு இதுவரை 66 சதவீதத்தை தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜம்மு காஷ்மீரின் முக்கிய வேட்பாளர்கள், தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஃபரூக் அப்துல்லா ஸ்ரீ நகரிலும், ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, அனந்த்நாக் தொகுதியில் போட்டியிட உள்ளார்கள்.பெரும் அரசில் குழப்பம் நீடிக்கும் ஜம்மு காஷ்மீரில், இந்த மக்களவை தேர்தலுக்கு பிறகாவது நல்ல தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version