டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் வன்முறையால் பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் துணைவேந்தர் நஜ்மா அக்தர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத் திருத்தத்தைக் கண்டித்தும், அதைத் திரும்பப் பெறக்கோரியும் வடகிழக்கு மாநிலங்கள், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டபோது 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும் பல வாகனங்களும் இருசக்கர வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்துப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்துப் போராட்டத்தை ஒடுக்கவும் அமைதி ஏற்படுத்தவும் ஏதுவாகப் பல்கலைக்கழகத்துக்கு ஜனவரி 5ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள் பெட்டிகளை எடுத்துக்கொண்டு தங்கள் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். ஒரு சில மாணவர்கள் மட்டும் தங்கள் மீதான காவல்துறையினரின் தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக்கழகத் துணை வேந்தர் நஜ்மா அக்தர், வன்முறையால் சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். தாக்குதலில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுவதை மறுத்த அவர், 200 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். பல்கலைக்கழக வளாகத்துக்குள் அனுமதியின்றிக் காவல்துறையினர் புகுந்தது குறித்து வழக்குத் தொடுக்கப் போவதாகவும் நஜ்மா அக்தர் தெரிவித்தார்.
மேலும் ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக டெல்லி பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்று திரண்டு ஜந்தர் மந்தருக்குச் சென்று போராட்டம் நடத்துவதற்காகப் பேருந்துகளில் புறப்பட்டுச் சென்றனர். மாணவர்கள் செல்லும் பாதையில் வன்முறை ஏற்படாமல் இருக்க அவர்களைப் பின்தொடர்ந்து காவல்படையினரும் உடன் சென்றனர்.