ஜேம்ஸ் பாண்ட் படங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வரும் அஸ்டன் மார்டின் நிறுவனம் உருவாக்கிய கார் சுமார் 45 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்களுக்கு உலகளவில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதேபோல், அந்த திரைப்படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பயன்படுத்தும் அதிநவீன கார்களும் பெரும் வரவேற்பை பெற்றன. அந்த வகையில், 1960களில் வெளியான ‘கோல்ட் பிங்கர்’, ‘தண்டர் பால்’ போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்ட அஸ்டன் மார்ட்டின் கார், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ‘007’ என்ற பதிவெண் கொண்ட அந்த காரில், துப்பாக்கி குண்டு தாக்காமல் இருக்க ‘புல்லட் ப்ரூஃப்’ கண்ணாடி மற்றும் முன்பக்க விளக்குகளிலிருந்து வெளியே வரும் துப்பாக்கி உள்ளிட்ட 13 பாதுகாப்பு அம்சங்கள் புகுத்தப்பட்டிருந்தன. இந்த கார் மிகவும் பிரபலமானதை அடுத்து, இதேபோன்ற காரை அஸ்டன் மார்டின் நிறுவனம் உருவாக்கி ஏலம் விட்டது. கலிபோர்னியாவில் நடைபெற்ற ஏலத்தில், காரை வாங்க கடும் போட்டி நிலவியது. இறுதியாக 45 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கு இந்த ஜேம்ஸ் பாண்ட் கார் ஏலம் போனதாக, அதனை ஏலம் விட்ட ஆர்எம் சோத்பை நிறுவனம் தெரிவித்துள்ளது.