ஜல்லிக்கட்டு வீரர்களின் கடவுள் யார் தெரியுமா ?

ஓவ்வொரு பிரிவினருக்கும் ஒரு கடவுள் உண்டு. ஜல்லிக்கட்டு வீரர்களின் கடவுள் பற்றி மக்கள் அதிகம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றி பெற, வீரர்கள் வணங்கி செல்லும் கோவில் பற்றிய செய்தித் தொகுப்பை பார்க்கலாம்.

ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் தான் நினைவுக்கு வரும். ஆனால் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு என்றால் அதற்கு புகழ்பெற்ற ஊர் விக்ரமகுளம். இங்கு நடைபெறும் போட்டிகளில் கலந்து கொண்டு, தொடர்ந்து வெற்றி வாகை சூடியவர் தான் அழகத் தேவர். மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே உள்ள சொரிக்காம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், ஜல்லிக்கட்டு வீரர்களின் கனவு நாயகனாக இருந்தவர். அடங்க மறுக்கும் காளைகளையும், அடக்கிய மாவீரர்.

அழகத் தேவருக்கு உறுதுணையாகவும், சக போட்டியாளராகவும் இருந்து சாகசம் நிகழ்த்தியவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சமயன். இவர்களது வீர சாகசங்கள் அப்பகுதி முழுவதும் பரவி காலம் காலமாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட்டு வந்தது.

ஒரு கட்டத்தில் காளை முட்டி காயம் அடைந்த அழகத் தேவர், நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து, இருவருக்கும் சொரிக்காம்பட்டி ஊர் மக்கள் கோயில் கட்டி வழிபட்டு வருகின்றனர். ஜல்லிகட்டிற்கு செல்லும் வீரர்கள் இந்த கோவிலுக்கு சென்று, அழகத் தேவர், சமயன் ஆகியோரை வணங்கிவிட்டுத்தான் போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.

பிற கோவில்களில் நடைபெறும் விழாக்களைப் போல், இந்த கோவிலிலும் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version