ஜல்லிக்கட்டு போட்டிகளில், நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த சேஷன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில், 2017ல் பிறப்பிக்கப்பட்ட சட்டத் திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழக கலாச்சார பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இந்த சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டினர்.
வெளிநாட்டு மாடுகள் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடையில்லை என்ற அரசுத்தரப்பு வாதத்தை நிராகரித்த நீதிபதிகள்,ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post