திண்டுக்கல் அருகே, தன்னுயிரை துச்சமென மதித்து தனது தந்தையின் உயிரை மகன் காப்பாற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த அய்யர்மடத்தை சேர்ந்த மணிவேல் என்பவர் விவசாயம் செய்து கொண்டும்,10 வருடங்களாக ஜல்லிக்கட்டு மாடுகளை வளர்த்து கொண்டும் வருகிறார். இந்த நிலையில் இன்று காலையில் தோட்டத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது திடீரென மணிவேலை ஜல்லிக்கட்டு மாடு ஒன்று சரமாரியாக கொம்பால் குத்திக் கொண்டிருந்தது. இதில் படுகாயமடைந்து மணிவேல் கீழே விழுந்த நிலையிலும், அந்த மாடு அவரை தொடர்ந்து தாக்க முயற்சி செய்தது. இந்த தகவலறிந்து வந்த அவரது மகன் பூபதி, தந்தையின் உயிரை காப்பாற்ற தன் உயிரை பணயம் வைத்து, மாட்டை பிடித்தார். பின்னர் கயிறு மூலம் மாட்டைக் கட்டிப்போட்டு விட்டு, தந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பூபதியின் சாமர்த்திய செயலை, அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.