பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பெயர் பெற்ற ஊர்கள் என்றால் அவணியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், விராலிமலை ஆகியவை தான்.ஆனால் இந்த முறை பல்வேறு ஊர்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்ட காளைகள் மாடுபிடி வீரர்களை அலற வைத்துள்ளது.
அந்த வகையில் அலங்காநல்லூரில் கலந்துக்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் காளைகளான சின்னக்கொம்பன், வெள்ளைக்கொம்பன்,கருப்புக்கொம்பன் ஆகிய காளைகள் வாடிவாசலில் இருந்து வில்லில் இருந்து விடப்பட்ட அம்பினை போல் சீறி பாய்ந்து மாடுபிடி வீரர்களை மல்லுக்கட்ட வைத்து தோற்கடித்து விவேக காளைகள் என்று பெயர் பெற்றுள்ளன.
பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டியின் போது வீரர்கள் எதிர்பாராமல் காளைகளால் காயமடையும் வீடியோக்களை பார்த்துள்ளோம்.ஆனால் இந்த முறை காரைக்குடி அருகே தாயும், குழந்தையும் எதிரே வந்தாலும் அவர்களை மிதிக்காமல் காளை தாண்டி செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பலரும் 2020ன் மெய் சிலிர்க்க வைக்கும் முதல் புகைப்படம் என்றும் கூறி வருகின்றனர்.
அதே போல் புதுக்கோட்டை அருகே வடமலைபுதூரில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்துக்கொண்ட இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமானின் அசுரன் என்ற காளை, தன்னை அடக்க வந்த மாடுபிடி வீரரின் கால் சட்டையை உருவி அசுரத்தனம் காட்டியது.