'ஜெயில்' திரைப்படம் எப்படி இருக்கிறது?

வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ், அபர்நதி, ராதிகா, ரவிமரியா உள்ளிட்ட இன்னும் சிலர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘ஜெயில்.’

தமிழ் சினிமாவில் யதார்த்த இயக்குநர்களில் ஒருவரான வசந்த பாலனின் படம் என்பதற்காகவே ரசிகர்களிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. ஆனால், அதனை நியாயப்படுத்தும் வகையில் முழுமையான ஒரு சினிமாவாக ‘ஜெயில்’ உருவாகவில்லை என்பதே உண்மை.

சென்னை மாநகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள், நகரத்திற்கு வெளியே மறு குடியமர்வுக்கு உட்படுத்தும் போது, அவர்களின் கல்வி, மருத்துவம், வாழ்வாதாரம் எல்லாம் எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை சொல்ல முனைந்திருக்கிறார் வசந்த பாலன்.

அடிப்படையில் மிக ஆழமான அரசியல் கதைக்களத்தை தேர்வுசெய்த அவர், திரைக்கதையில் தனது இயல்பான திரைமொழியில் இருந்து விலகிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

கர்ணா என்ற பாத்திரத்தில் ஜி.வி. பிரகாஷ், அவரது நண்பர்களாக வரும் ராக்கி, கலை என மூவரின் பாத்திரங்களின் பின்னணியில் மொத்த கதையும் நகர்கிறது.

காவேரி நகரில் வசித்து வருவதால் இவர்களின் வழ்க்கை எப்படியெல்லாம் திசை மாறுகிறது, இவர்களது குடும்பத்தினர் என்ன ஆனார்கள், இறுதியில் யார் யார்க்கு என்ன நேர்ந்தது என நிறைவடைகிறது ‘ஜெயில்.’

காவேரி நகர் பகுதி முழுவதும் காவல்துறையினரால் கண்காணிக்கப்படுவதால், அங்கு வசிக்கும் மக்களுக்கு இதுவும் ஜெயில் தான் என்பதே இயக்குநரின் வாதம்.

ஆனால், அதனை ரசிகர்கள் புரிந்துகொள்ளும் விதத்திலோ அல்லது அம்மக்களின் வாழ்வியலை பின்னணியாக கொண்டோ எடுக்கப்படாதது ஏமாற்றத்தை தருகிறது.

சின்ன் சின்ன திருட்டு, வழிப்பறிகளில் ஈடுபடும் வடசென்னை இளைஞராக ஜி.வி. பிரகாஷ்.

நண்பர்களுக்காக எதையும் செய்ய துணிவது, அடிக்கடி வம்பிழுத்த படியே அபர்நதியை காதலில் வீழ்த்துவது, அம்மா ராதிகாவிடம் சேட்டை செய்வது என பார்த்து பழகிய பாத்திரம் தான். அதிலும் முடிந்தவரை நல்ல அழுத்தமான நடிப்பை கொடுத்து, படத்திற்கு சிறிதேனும் பலம் சேர்த்திருக்கிறார்.

அபர்நதி, ராதிகா, ரவிமரியா, பசங்க பாண்டி போன்ற மற்ற பாத்திரங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தாலும், பல இடங்களில் அவர்களுக்கான காட்சிகள் செயற்கைத்தனமாக தெரிகிறது.

தேவையில்லாமல் வரும் பாடல்கள் ஏற்கனவே விரக்தியில் இருக்கும் ரசிகர்களை இன்னும் அதிகமாக சோதிக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையும் ஏற்கனவே வலுவிழந்து பயணிக்கும் திரைக்கதைக்கு பலம்சேர்க்க முடியாமல் பரிதவிக்கிறது. கணேஷ் சந்திராவின் ஒளிப்பதிவு மட்டும் கொஞ்சம் ஆறுதலான விசயம்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஜெயில்’ வலிமையான திரைக்கதை இல்லாமல் நூலருந்த பட்டமாக காட்சியளிக்கிறது.

மொத்தத்தில் ’ஜெயில்’ – மதில்சுவர் இல்லாத சிறைச்சாலை…. 

– அப்துல் ரஹ்மான்

Exit mobile version