ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்க உள்ளது.
175 தொகுதிகள் கொண்ட ஆந்திர சட்டப்பேரவைக்கு அண்மையில் நடைபெற்ற தேர்தலில், ஜெகன் மோகனின் ஒய்.எஸ்-ஆர். காங்கிரஸ் கட்சி 151 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது. கடந்த 30ம் தேதி மாநில முதலமைச்சராக ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். இந்தநிலையில், 5 துணை முதலமைச்சர்கள் மற்றும் 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளனர். ஆந்திர அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க வெவ்வேறு சமூகங்களை சேர்ந்த 5 பேர் துணை முதலமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், காப்பு பிரிவை சேர்ந்தவர்கள் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட உள்ளனர். தற்போது பொறுப்பேற்கும் அமைச்சரவையில் 25 உறுப்பினர்கள் இடம் பெறுவர் என்றும் அடுத்த இரண்டரை ஆண்டுகள் இந்த அமைச்சரவை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.