ஆந்திராவின் முதலமைச்சராகிறார் ஜெகன் மோகன் ரெட்டி

ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30 ம் தேதி பதவியேற்கிறார்.

ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது.வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்ற நிலையில் தொடக்கத்தில் இருந்தே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்தது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 150 தொகுதிகளுக்கும் மேலாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களை மட்டுமே பிடிக்கும் நிலை உருவாகி உள்ளது. நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிமுகம் காட்டியது. இதையடுத்து ஆந்திராவின் புதிய முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர்.ஜெகன் மோகன் ரெட்டி வரும் 30 ம் தேதி பதவியேற்க உள்ளார். 25 ம் தேதி நடைபெற உள்ள அக்கட்சியின் எம்.எல்.ஏ க்கள் கூட்டத்தில் ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட உள்ளார்.

Exit mobile version