பேரவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்ட திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 3 நாட்கள் மட்டும் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், சட்டம் ஒழுங்கு தொடர்பாக பேசினார். அவரது பேச்சுக்கு பதிலளித்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச முயன்றார். அப்போது அமைச்சரை ஒருமையில் பேசிய அன்பழகன், அவையில் கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினார். பின்னர் பேரறிஞர் அண்ணா வழியில் மறப்போம், மன்னிப்போம் என அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதால், ஜெ.அன்பழகனை பேரவையில் இருந்து வெளியேற்றும் தீர்மானம் கைவிடப்பட்டது. இருப்பினும், தொடர்ந்து பிரச்னைக்குரிய வகையில் திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் நடந்து கொண்டார். ஆளுநர் உரையை கீழித்து எறிந்து அராஜகத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்ட திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்கும் தீர்மானத்தை, சபாநாயகர் முன்மொழிய, பேரவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் வழிமொழிந்தார். பின்னர் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகன், நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் மற்றும் அடுத்த கூட்டத்தொடரில் பங்கேற்கவும் தடை விதித்து சபாநாயகர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதனிடையே, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் கோரிக்கையை ஏற்று திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. ஜெ.அன்பழகன் மீதான தண்டனை குறைப்பை அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இதையடுத்து, ஜெ.அன்பழகன் வரும் 9ஆம் தேதி வரை மட்டும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.