சபரிமலையில் போடப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் பத்திரிகையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவோம் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். ஆனால் இந்த உத்தரவை அமல்படுத்த கூடாது என பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேரளாவில் பல நாட்களாக ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் சபரிமலை நடை திறக்கப்பட்ட போது 12 பெண்கள் தரிசனத்திற்காக வந்திருந்தனர். அவர்களை அனுமதிக்க விடாமல் போராட்டங்கள் நடைபெற்றது. போராட்டக்காரர்களை அப்போது போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில் சபரிமலை ஐய்யப்பன் கோயில் நடை சித்திரை ஆட்ட பூஜைகளுக்காக வரும் 5ம் தேதி திறக்கப்பட்டு 6ம் தேதி இரவு 10 மணிக்கு நடை மூடப்படுகிறது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தவிர்க்க சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் இலவங்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பக்தர்களை தவிர வேறு யாரையும் கொண்டும் அனுமதிக்க மாட்டோம் என போலீஸார் கூறியுள்ளனர். ஒரு ஏடிஜிபி, 2 ஐ.ஜிகள், 5 எஸ்.பிகள், 10 டி.எஸ்.பிகள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை பத்திரிகையாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக நடை திறக்கும் முன்பாகவே பத்திரிகையாளர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இம்முறை 5ம் தேதி காலை 8 மணிக்கு தான் அவர்கள் அனுமதிப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.