யூரோ கோப்பையை தட்டித்தூக்கிய இத்தாலி – இங்கிலாந்தின் கனவை தகர்த்தது

யூரோ கால்பந்து தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி, இத்தாலி அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

நள்ளிரவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த இத்தாலி அணியும், இங்கிலாந்து அணியும் மோதின. ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே இங்கிலாந்து அணியின் லூக் ஷா கோல் அடித்து அசத்தினார். தேசிய போட்டிகளில் இரு கோல்கள் மட்டுமே பதிவு செய்த லூக் ஷாவுக்கு சர்வதேச போட்டியில் அடித்த முதல் கோல் இதுவாகும். யூரோ கோப்பை தொடர்களில் ஆட்டம் தொடங்கி 2 நிமிடத்திலேயே கோல் அடித்த ஒரே அணி என்றால் அது இங்கிலாந்து அணி தான். இதனால் அரங்கில் இருந்த இங்கிலாந்து ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முதல் பாதியில் இத்தாலி அணி கோல் எதுவும் அடிக்காததால், இங்கிலாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியில், இரு அணிகளும் ஆக்ரோஷமாக விளையாடி வந்த நிலையில், 67வது நிமிடத்தில் இத்தாலியின் LEONARDO BOUNUCCI அபாரமாக கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். இதன் பின்னர் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதன் பின்னரும் இரு அணிகளும் கோல் அடிக்காததால், PENALTY SHOOT OUT முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் இத்தாலி அணி 3 கோல்களும், இங்கிலாந்து அணி 2 கோல்களும் அடித்தன. இதன் மூலம் இத்தாலி அணி யூரோ கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது. 1968ஆம் ஆண்டு யூரோ கோப்பையை வென்ற இத்தாலி அணி, 53 ஆண்டுகளுக்குப் பிறகு 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. வெற்றி பெற்ற இத்தாலி அணிக்கு யூரோ கோப்பையும், 89 கோடி ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

Exit mobile version