காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில், பாகிஸ்தான் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது உண்மை தான் என ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீநகரில் செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர் பி.வி.ஆர். சுப்ரமணியம், காஷ்மீரின் 22 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் இயல்பு நிலையில் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும், 5 மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். சுதந்திர தினத்தை முன்னிட்டு 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன எனவும், இனிமேல் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் எனவும் கூறினார். அதே போன்று, ஜம்முக்காஷ்மீரில் இதுவரை உயிரிழப்புகள் எதுவும் எற்படவில்லை என கூறிய அவர், பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். வரும் திங்கள் முதல் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும், இன்று முதல் பொது போக்குவரத்து, அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்றும் தொலைத்தொடர்பு இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் தெரிவித்தார்.