குழந்தைகளின் உரிமையை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் மனித உரிமை என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமையில் இருந்துதான் ஆரம்பமாகிறது என்றும் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா தெரிவித்துள்ளார்.
சென்னை தனியார் கல்லூரியில், தோழமை இயக்கம், யூனிசெஃப் சார்பில் குழந்தை திருமண தடுப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, காவல்துறை கூடுதல் இயக்குனர் சீமா அகர்வால் ஐபிஎஸ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி விமலா, குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டிய மிக பெரிய கடமை ஆண்களுக்கே அதிகம் உள்ளது என்றும் ஒவ்வொரு ஆணும் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை திருமணம் செய்ய மாட்டோம் என்று உறுதியாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய தோழமை இயக்க தலைவர் தேவனேயன், 18 வயது நிரம்பாத பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது என்பது மிகவும் கொடுமையானது என்றூம் மேலும் அது அந்த குழந்தைகளுக்கு மனரீதியிலான பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறினார்.