தமிழர்களின் நாகரீகம், பண்பாட்டை அறிய முயல்வதில், மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் என்பவர், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சிவகளை பரம்பு பகுதியில், அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடத்தியதின் முடிவு என்னானது என்றும், ஏன் இதுவரை ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி அறிக்கை சமர்பிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினர்.
இதுகுறித்து மத்திய, மாநில தொல்லியல்துறை இயக்குநர்கள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தவறினால் தொடர்புடைய தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு சம்மன் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
தமிழர் நாகரீகம், பண்பாடு குறித்து அறிவதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது ஏற்புடையது அல்ல என்றும் நீதிபதிகள் கூறினர். குறிப்பிட்ட காலத்திற்குள் ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு தொடர்பான முடிவுகளை அறிவிக்க வேண்டும் என கூறி, வழக்கை வரும் 19ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.