பெரம்பலூர் மாவட்டத்தில் ஒருவருக்கு கூட புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது பாராட்டுக்குரியது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு, முடிவுற்ற திட்டப்பணிகளை துவக்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது பேசிய முதலமைச்சர், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையால், நோய் பரவல் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, குறு, சிறு, நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது பேசிய முதலமைச்சர், பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பேரிடர் காலத்தின் போது அவசர கால கடனுதவியாக தொழில் கூட்டமைப்பினருக்கு 39 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, நடிகர் கமல் போன்றவர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பெயரை பயன்படுத்தி வாக்கு சேகரிக்க தகுதியற்றவர்கள் என கடுமையாக சாடினார்.
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்து கேட்கப்பட்டதாகவும், அதனடிப்படையிலேயே பள்ளிகள் திறக்கும் முடிவு ஒத்திவைக்கப்பட்டது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்களின் நலனில் அரசு மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக கூறிய முதலமைச்சர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்ட பிறகே, பள்ளிகள் திறப்பு குறித்து முடிவு எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மேற்கொண்ட நலத்திட்டப் பணிகளை பட்டியலிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய திட்டங்கள் அனைத்தும் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.
தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து சிறப்பித்த முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக சார்பாக பூங்கொத்து கொடுத்து வீர செங்கோல் வழங்கப்பட்டது. மேலும், அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.