கிருஷ்ணகிரியில் 4 மணி நேரமாக ஆம்புலன்சில் காத்திருந்த இளைஞர், ஆக்சிஜன் தீர்ந்ததால் மூச்சுத்திணறி துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் வேதனையை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், கொரோனா நோயாளிகள் திண்டாடி வருகின்றனர். உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் பலர் மரணத்தை தழுவுவது தொடர்கதையாகி வருகிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த 34 வயது இளைஞர், கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 5 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், ஆக்சிஜன் படுக்கைகள் நிரம்பியதால், உயிருக்கு போராடிய அந்த இளைஞர் ஆம்புலன்ஸிலேயே காத்திருக்கும் நிலை நீடித்தது.
நான்கு மணி நேரமாகியும் படுக்கைகள் கிடைக்காததால், ஆம்புலன்ஸில் இருந்த ஆக்சிஜன் தீர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காத காரணத்தால், அந்த இளைஞர் ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அரசு மருத்துவமனை அருகில் ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் கூடிய மையங்களை ஏற்படுத்தி கொரோனா நோயாளிகளின் உயிர் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.