12ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில், HiTech Lab மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடநூல்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை வகுப்பாசிரியர்கள் வரும் 14ம் தேதி வரை பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்வார் எனக் கூறப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடன் HiTech Lab மூலம் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்து தரப்பட உள்ளதாக தெரிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை, இதற்காக மாணவர்கள் தங்களுடைய மடிக்கணினியை பள்ளிக்கு கட்டாயம் எடுத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளது. வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகளை அந்தந்த பள்ளிகளில் பணியாற்றும் கணினி ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடநூல்கள் மற்றும் வீடியோ பாடங்கள் பதிவிறக்கம் செய்யும் பணிகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.