திருச்சியில், விண்வெளி ஆய்வு வளர்ச்சி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். 2019 ஆம் ஆண்டுக்கான விண்வெளி திட்டங்கள் பற்றி டெல்லியில், இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கமளித்துள்ளார். மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இளம் விஞ்ஞானி திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றார். மாநிலத்திற்கு மூன்று மாணவர்கள் வீதம் 36 பேர் தேர்வு செய்து, ஒரு மாதம் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக கூறினார்.
சிறிய செயற்கைக்கோள் செய்வது, ராக்கெட் ஏவுதளம், ஆராய்ச்சி கூடங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்த திட்டம் மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். திருச்சியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு வளர்ச்சி மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்த அவர், இதுதவிர, நாக்பூர், இந்தூர் உள்ளிட்ட மேலும் நான்கு இடங்களிலும் விண்வெளி ஆய்வு அமைக்கப்பட இருப்பதாக கூறியுள்ளார்.