ககன்யான் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்படும் பெண் ரோபோ வியோ மித்ராவை பெங்களூருவில் அறிமுகம் செய்து வைத்தது இஸ்ரோ…
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கான ககன்யான் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், விண்வெளிக்கு செல்லும் மனிதர்கள் அங்கு உள்ள தட்பவெட்ப நிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை எப்படி எதிர்கொள்வது என தெரிந்து கொள்வதற்காக, மனித உடல் அமைப்பை அப்படியே கொண்ட பெண் ரோபோவை இஸ்ரோ உருவாக்கியுள்ளது.
தற்போதைய ஆராய்ச்சிக்கு ஏற்ப, கால்கள் மட்டும் இல்லாமல் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ விண்வெளியில் தான் பார்ப்பதையும், உணர்வதையும் பெங்களூருவில் உள்ள தகவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பும்.
இந்த தகவல்கள் மூலம், விண்வெளியில் மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான அம்சங்கள் என்னென்ன என்பதனை நம்மால் அறிந்து கொள்ள முடியும். மனிதர்களை விண்வெளிக்கு வெற்றிகரமாக அனுப்பவும், அங்கு பாதுகாப்பான முறையில் வாழ்ந்திடவும் இந்த ரோபோ அனுப்பும் தகவல்கள் பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரோபோ வியோ மித்ரா இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு அனுப்பபடும் என இஸ்ரோ தகவல்கள் தெரிவிக்கின்றன.