விக்ரம் லேண்டர் உடனான தொடர்பை இழந்தது குறித்து தேசிய நிபுணர்கள் குழு மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொள்ள கடந்த ஜூலை 22 ஆம் தேதி சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க முயன்ற போது நிலவின் தரைப்பகுதியில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் உயரத்தில் தகவல் தொடர்பை இழந்து விட்டதாக இஸ்ரோ தெரிவித்தது.
இதையடுத்து, விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் ஆர்பிட்டர் உதவியுடன் கண்டறியப்பட்டது. இந்நிலையில் விக்ரம் லேண்டரின் ஆயுள் காலம், இன்றுடன் முடிவடைய உள்ளதால், தொடர்பு இழந்தது குறித்து இறுதிக்கட்ட ஆய்வில் இஸ்ரோ இறங்கியுள்ளது. விக்ரம் லேண்டருடன் தொடர்பு துண்டிக்கப்பட்டாலும், சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்பிட்டர் மூலம் நிலவு குறித்த ஆய்வு தொடரும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.