இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டம்

இஸ்ரேல் நாட்டின் நீர் மேலாண்மைத் திட்டம் சிறப்பாக உள்ளதால், அதை அறிந்து கொள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழு அங்கு சென்றுவர திட்டமிட்டுள்ளது. இதனை தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் சமீபத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். நீர் மேலாண்மையில் இஸ்ரேல் எப்படி உலகின் முன்மாதிரியாக உள்ளது? இஸ்ரேல் எந்தவகையில் தமிழகத்திற்கு வழிகாட்டும்?

1948ம் ஆண்டுதான் இன்றைய இஸ்ரேல் நாடு உருவானது. நிலவியல் அடிப்படையில் 60% பாலைவனம் கொண்ட ஒரு வறண்ட நாடு . இந்நாட்டின் மொத்த நிலப்பரப்பு 27,800 சதுர மைல். அதில் சுமார் இரண்டாயிரம் சதுர மைல் நிலத்துக்கு மட்டுமே பாசன வசதி தர முடியும் என்பதே இன்றைய நிலை.

அப்படி இருந்தும் இஸ்ரேலால் தனது தேவைக்கு உணவை உற்பத்தி செய்ய முடிவதுடன், விளை பொருட்களை ஏற்றுமதி செய்யவும் முடிகிறது. 1948ல் 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. இன்னொருபக்கம் இஸ்ரேல் மக்களில் 97% பேர் தூய்மையான குடிநீரையும் பெறுகிறார்கள். இதையெல்லாம் எப்படி சாதித்தது இஸ்ரேல்?.

இஸ்ரேலின் இந்த உற்பத்தி சாதனைக்கு அதன் வேளாண்மைத் தொழில் நுட்பங்களே காரணமாக உள்ளன. விவசாயத்தில் உலகின் வேறெந்த நாட்டையும் விட, அதிக அளவிலான தொழில்நுட்பங்களை இஸ்ரேல் பயன்படுத்துகிறது.

இஸ்ரேலில் பெய்யும் ஒவ்வொரு துளி நீரும் சேமிக்கப்படுகிறது, இஸ்ரேலில் வெளியேற்றப்படும் 90% நீர் மறு சுழற்சி செய்யப்படுகிறது. இஸ்ரேலின் விவசாயத்தில் இந்த சுத்தீகரிக்கப்பட்ட நீரின் பங்கு 75% ஆக உள்ளது. இந்த மறு சுழற்சிக்காக இஸ்ரேலில் 120 மறு சுழற்சி நிலையங்கள் செயல்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட நீர் பாலைவனத்தின் நடுவே உள்ள செயற்கை ஏரிக்கு செலுத்தப்பட்டு, அங்கிருந்து வயல்களுக்குப் பகிரப்படுகிறது.

இஸ்ரேலிய வயல்களில் வாய்க்காலோ, கால்வாய்களையோ நம்மால் பார்க்க முடியாது. திறந்தவெளி நீர்வழிகளில் ஆவியாதல் அதிகம் என்பதால் தவிர்க்கப்படுகிறது. இதற்கு மாற்றாக இஸ்ரேலில் சொட்டு நீர்ப் பாசனம் என்ற முறை உருவாக்கப்பட்டு, அதன் மூலமாக ஒவ்வொரு தாவரத்திற்கும், அதற்கு தேவையான அளவுக்கு மட்டுமே நீர் பகிரப்படுகிறது. அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால், பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும், பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, சூரிய வெப்பத்தைக்கூட இவர்கள் கட்டுப்படுத்துகிறார்கள்.

இஸ்ரேல் கண்டுபிடித்த திட்டங்களில் சிறந்தது கடல் நீரை குடிநீராக்கும் திட்டம். இஸ்ரேலின் மொத்த குடிநீரில், கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களின் மூலம் 50 சதவீதமும், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மூலம் 40 சதவீதமும், நீர்நிலைகளில் இருந்து 10 சதவீதமும் கிடைக்கின்றது. சென்னை குடிநீர் பஞ்சத்தில் சிக்கியபோது, இஸ்ரேலின் கடல் நீரை குடிநீராக்கும் திட்டமே கை கொடுத்தது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் துளைகள் மற்றும் உடைப்புகளை உடனே கண்டறிய ஜி.பி.எஸ் கருவிகளைப் இஸ்ரேல் பயன்படுத்துகிறது.

முதலமைச்சர் தலைமையிலான குழு இஸ்ரேலுக்கு பயணம் செய்யும் போது, தமிழகத்திற்குத் தேவையான புதிய திட்டங்கள், புதிய தொழில் நுட்பங்கள் நிச்சயம் கிடைக்கும் என்பதே விவசாய மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Exit mobile version