குடியுரிமை திருத்த சட்டத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தம்மால் முடிந்த உதவியை செய்வதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்ததாக, இஸ்லாமிய மதகுருமார்கள் கூறியுள்ளனர்.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை, ஜமா அத்துல் உலமா சபையை சேர்ந்த குருமார்கள் சந்தித்து பேசினர். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு ஆகிய விவகாரங்கள் குறித்து இஸ்லாமிய மதகுருமார்கள், நடிகர் ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜமா அத்துல் உலமா சபை தலைவர் காஜா மொயீனுத்தீன், குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க தம்மால் முடிந்த உதவியை செய்வதாக ரஜினி உறுதியளித்ததாக கூறினார். மதகுருமார்கள் தூண்டிவிடப்படவில்லை எனவும், அதுகுறித்து ரஜினியிடம் விளக்கியதாகவும், காஜா மொயீனுத்தீன் கூறினார்.