யானைகளில் திருநங்கையா?

கும்கி திரைப்படத்திற்கு முன்பு வரை தமிழுலகம் பெரும்பாலும் யானை குறித்து அறிந்து வைத்திருந்ததெல்லாம் , யானை வகைகள் ஒன்று ஆண்யானை மற்றொன்று பெண்யானை என்பது மட்டும்தான் . இன்னும் கொஞ்சம் விஷயம் உள்ளவர்கள் ஆப்பிரிக்க யானை மற்றும் ஆசிய யானை என்பார்கள்.

ஆம். உலகில் இந்த இரண்டுதான் யானை வகைகள். 2016 கணக்கெடுப்பின்படி உலகில் ஆப்பிரிக்க யானைகளை விட ஆசிய யானைகள் அதிகம் இருந்தன. மற்றபடி இந்த வெள்ளை யானையெல்லாம் முகவரி இல்லாமல் போய் பல்லாண்டுகளாகிவிட்டன. ஆனால் கும்கி,மக்னா, சவானா, ஃபாரஸ்ட் என ஆப்பிரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்குள்ளாக இப்படி பல்வேறு பிரிப்புகள் உண்டு.

ஆனால் ஒன்றை நாம் கவனிப்பதில்லை. எப்போதெல்லாம் மக்களை யானை அச்சுறுத்தியது என்று செய்தி வருகிறதோ, பெரும்பாலும் மக்னா யானைகள் என்றுதான் செய்தி வந்திருக்கிறது. அப்படியென்றால் அதென்ன மக்னா யானை.

மக்னா யானைகளைக் குறித்து நிலவும் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால் இவை திருநங்கை யானைகளாம். அதாவது ஆணுமல்லாத , பெண்ணுமல்லாத யானைகள் என்கிறார்கள். அடடே யானைகளிலும் கூட இது உண்டா என்று தோன்றுகிறதா. தவறில்லை.

உண்மையில் இப்படிச் சொல்பவர்கள் பாவம் புரிதல் கோளாறால் அப்படிச் சொல்கிறார்கள். மக்னா என்பது யானைகளில் தந்தம் இல்லாத ஆண்யானைகளுக்கான குறியீட்டுப் பெயர்தான். மற்றபடி எல்லாம் வெற்று ஊகங்களே. 

ஆப்பிரிக்க யானைகளில் ஆண், பெண் யானை இரண்டுக்குமே தந்தம் இருக்கும் அப்படியென்றால் ஆப்பிரிக்க யானைகள் எல்லாம் என்ன திருநம்பிகளா?

கொம்புகள் இல்லாத மோழையாடுகளை எப்படி புரிந்துகொள்வோமோ அதே போலத்தான் இந்த மோழை யானைகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றபடி இது திருநங்கை யானை என்பதெல்லாம் மீசை இல்லாதவன் ஆண் இல்லை என்பதைப் போன்ற அனுமான உளறல்கள்தான்.

Exit mobile version