திமுக ஆட்சியில் போலீசுக்கே இந்த கதியா? என பொதுமக்கள் அச்சம்…

சென்னையில், உளவுப்பிரிவு தலைமைக் காவலரே காரில் கடத்தப்பட்டு, 1 லட்சம் ரூபாயை பறித்துச் சென்ற சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்தில் உளவுப் பிரிவு தலைமை காவலராகப் பணியாற்றி வருகிறார், சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ரவி. கடந்த 28ஆம் தேதி ரவி தனது செல்போனை சர்வீஸ் செய்ய வேண்டும் என அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அஜய் விக்கி என்பவரிடம் கூறியுள்ளார். செல்போனை வாங்கிய அஜய் விக்கி அதில் வந்த குறுஞ்செய்தியை படித்து அதிர்ச்சியடைந்தார். “உங்கள் வங்கிக் கணக்கில் 8 லட்சம் ரூபாய் இருப்பில் உள்ளது” என்ற குறுஞ்செய்தியைக் கண்டதும், அஜய் விக்கியின் பண ஆசை, அவர் மனதில் தாறுமாறான எண்ணங்களை உருவாக்கியது.

பின்னர் திட்டமிட்டபடி, அஜய்விக்கி தன் நண்பர்கள் லோகேஷ், நிஷாந்த் ஆகியோருடன், அடையாறில் செல்போன் கடைக்கு செல்லலாம் என ரவியை காரில் அழைத்துச் சென்றனர். அப்போது ரவிக்கு மயக்கமருந்து கொடுத்தவர்கள், நாவலூர் வழியாக காரில் கடத்திச் சென்றனர். அது மயக்க மருந்து தானா அல்லது ஏதாவது போதை மருந்தா என சந்தேகம் ஒரு புறம் இருக்க, ரவியின் செல்போனில் உள்ள கூகுள்பே மூலம், 1 லட்சம் ரூபாயை அஜய் விக்கி குழு தங்களது வங்கிக் கணக்கிற்கு மாற்றியது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரவி இதுகுறித்து சூளைமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த31ஆம் தேதி, ஓசூர் சோதனைச் சாவடியில் காருடன் சிக்கிய லோகேஷை தனிப்படை போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். லோகேஷ் அளித்த தகவலின் பேரில், ஆந்திராவில் பதுங்கியிருந்த அஜய் விக்கியையும் கைது செய்தனர், காவல்துறையினர். தலைமறைவாக உள்ள நிஷாந்தை மட்டும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். திமுக ஆட்சியில், காவலருக்கே பாதுகாப்பு இல்லை என்ற நிலை உள்ளபோது, பொதுமக்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version