தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய டி.என்பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகள் விவகாரத்தில், தமிக அரசு நேர்மையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் 41 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தி.மு.க முக்கியப் புள்ளிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பிருக்கும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 மற்றும் குரூப் 2-ஏ தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. படித்த இளைஞர்களுக்கு அரசுத் துறைகளில் உரிய வாய்ப்புக்கள் வழங்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளை தமிழக அரசு நடத்தியது. ஆனால், சில விஷமிகள் அதில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த முறைகேடு விவகாரம் தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கும் தமிழக அரசு உத்தரவிட்டது. யாருடைய தலையீடும் இன்றி, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசின் உத்தரவையடுத்து, சி.பி.சி.ஐ.டி விரைந்து செயல்பட்டது.
சி.பி.சி.ஐ.டி, டி.ஜி.பி ஜாபர் சேட் உத்தரவின்பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் எந்த வகையிலும் தப்பிவிடாதபடி, சி.பி.சி.ஐ.டி தனிப்படை காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர். இதுவரை 41 பேர், டி.என்.பி.எஸ்.சி தேர்வில் முறைகேடு செய்ததாக கைதாகி உள்ளனர். இந்த விவகாரத்தில், தற்போதுவரை விசாரணையும், குற்றவாளிகள் தேடுதல் வேட்டையும் முழு வேகத்தோடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், டி.என்.பி.எஸ்.சி முறைகேடு விவகாரம் வெளியான நேரத்தில் இருந்தே பதற்றத்துடன் காணப்பட்டார். அது தொடர்பாக முன்னுக்குப் பின் முரணான தகவல்களையும் அவர் வெளியிட்டு வந்தார். சி.பி.சி.ஐ.டி காவல்துறையினரின் விசாரணையை திசைதிருப்பும் நோக்கத்தில் இருந்த தி.மு.க தலைவர் ஸ்டாலினின் நடவடிக்கைகள் ஆரம்பத்தில் இருந்தே சந்தேகத்திற்குரியதாக இருந்தன.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஏன் அப்படிப் பதட்டம் அடைந்தார் என்பதற்கான காரணங்கள் தற்போது வெளியாகத் தொடங்கி இருக்கிறது. டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் முக்கியக் குற்றவாளியான ஐயப்பன், தி.மு.க-வின் பிரச்சார பீரங்கி என்பதும், அவர் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவுக்கு நெருக்கமானவர் என்பதும் தற்போதைய தெரிய வந்துள்ளது. மேலும், ஐயப்பன், தி.மு.க மாணவரணியில் முக்கியப் பொறுப்பில் இருப்பதும்,
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் வெளியாகி உள்ளன. இந்த உண்மைகள்தான், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு ஆகியோரை பதற வைத்துள்ளது.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு-வுக்கும், டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் கைதாகி உள்ள முக்கியக் குற்றவாளி ஐயப்பனுக்கும் உள்ள தொடர்புகளை, அ.தி.மு.க எம்.எல்.ஏ இன்பதுரை புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ அப்பாவு, டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டில் கைதாகி உள்ள முக்கியக் குற்றவாளி ஐயப்பனை, மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தும்போது, என் அன்புத் தம்பி என்று சொல்லித்தான் அறிமுகம் செய்வார் எனவும் எம்.எல்.ஏ இன்பதுரை தெரிவித்தார்.
ஐயப்பனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அப்பாவு கூறுவது, முழுப்பூசணிக் காயை சோற்றில் மறைக்கும் காரியம் என்றும், அப்பாவுவின் பேச்சு செல்லாத காசின் பொல்லாத கோபம் என்றும் இன்பதுரை எம்.எல்.ஏ தெரிவித்தார். அப்பாவு எம்.எல்.ஏ பற்றி இன்பதுரை தெரிவித்த கருத்துக்கள், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் அப்படியே பொருந்தும் என்பதை அமைச்சர் ஜெயக்குமாரின் பேட்டியும் உறுதி செய்துள்ளது.
தி.மு.க-வினர் ஆட்சியில் இருக்கும் போது தவறு செய்வதையே வாடிக்கையாக வைத்திருந்ததால்தான், தொடர்ந்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களிலும் மக்கள் அவர்களைத் தோற்கடித்தனர். அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, திருந்த நினைக்காத தி.மு.கவும், அதன் தலைவர் ஸ்டாலினும், ஆட்சியை இழந்த பிறகும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும்… தப்ப முடியாமல் தண்டனை பெறப்போவது உறுதி.