எட்டி எனப்படும் பனிமனிதன் யார்? இதுவரை வந்த கருத்துகள் என்னென்ன? – சிறப்புக்கட்டுரை

நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் எட்டி எனப்படும் பனி மனிதனின் கால் தடத்தை கண்டதாகவும், அவை அளவில் மிகப் பெரியவை என்றும் இந்திய ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இது நீண்டகாலமாக இருந்த பனிமனிதன் சர்ச்சைக்கு மீண்டும் உயிரூட்டி உள்ளது. எட்டி எனப்படும் பனிமனிதன் யார்? அது குறித்து குறித்து இதுவரை வந்த கருத்துகள் என்னென்ன? – பார்ப்போம்…

நேபாளம், திபெத் மற்றும் இந்தியாவில் சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் இமயமலையில் பனி மனிதர்கள் வசிப்பதாக பல நூற்றாண்டுகளாகவே நம்பி வருகின்றனர். ஆனால் 19ஆம் நூற்றாண்டில் இதுகுறித்து ஐரோப்பியர்கள் எழுதத் தொடங்கிய பின்னரே பனிமனிதன் குறித்து உலகம் ஆர்வம் அடைந்தது.

1832ஆம் ஆண்டில், ட்ரீக்கர் என்ற ஐரோப்பியர் ஆசியாடிக் சொசைட்டி ஆப் பெங்கால் என்ற இதழில், ‘உயரமான புள்ளிகளுடைய இருகால் உயிரினம், நீளமான கருமையான முடியுடன் சூழப்பட்டிருக்கும், அதை பார்த்தால் அச்சத்தால் தப்பி ஓடத்தோன்றும்’ – என்று ஒரு மர்ம விலங்கைப் பற்றிக் குறிப்பிட்டார். அப்போது ஐரோப்பியர்கள் அதை ஒரு பெரிய குரங்காகக் கருதினர். பனி மனிதன் என்ற பெயர் வைக்கப்படவில்லை.

1889ஆம் ஆண்டு லாரன்ஸ் வாட்டெல் என்ற ஐரோப்பியர் தனது ’அமாங் தி ஹிமாலயாஸ்’ என்ற ஆவணத்தில் இமய மலையில் உள்ள பெரிய கால்தடங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அது எந்த உயிரினத்தால் உருவானது என்று அவரால் சரியாகக் கூற முடியவில்லை.

1921ஆம் ஆண்டில் ராணுவ படைத் தலைவரான சார்லஸ் ஹோவர்ட்-புரி என்பவர் தான் எழுதிய ’மவுண்ட் எவரெஸ்ட் தி ரிகோன்னைஸ்சென்ஸ்’ என்ற புத்தகத்தில் தான் முதன்முறையாக, ‘இந்தப் பெரிய காலடித்தடங்கள் பனி மனிதனுடையவை என்று உள்ளூர் மக்கள் நம்புகிறார்கள்’ – என்று காலடித்தடங்களை பனிமனிதனோடு முதன்முறையாகத் தொடர்புபடுத்தினார்.

அதன்பின்னர் பலரும் பனிமனிதன் குறித்த பல அனுமானங்களையும், கருத்துகளையும் கூறி உள்ளனர். 1953ஆம் ஆண்டில், எவரெஸ்டில் ஏறிய முதல் மலையேறிகளான எட்மன்ட் ஹில்லாரி மற்றும் டென்சிங் நார்கே மவுண்ட் ஆகியோர் ’எவரெஸ்டில் பெரிய கால்தடங்களை பார்க்க முடியும்’ என்று அறிக்கையிட்டனர். ஆனால் அங்கு எட்டி என்ற பனிமனிதன் இல்லை என்றும் அவர்கள் கூறினர்.

இமயமலையில் பெரிய காலடித்தடங்கள் பல்வேறு காலகட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டாலும், பனிமனிதனை யாரும் நேரில் பார்க்கவில்லை. பனிமனிதனோடு தொடர்புடையவை என்று நம்பப்பட்ட 9 மாதிரிகளை கடந்த 2017ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பஃபோலா பல்கலைக்கழகத்தில் டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்தியபோது அவை அனைத்தும் கரடிகளோடு தொடர்புடையவை என்று ஆய்வு முடிவுகள் கூறின. 

பனியில் கரடிகள் விட்டுச் செல்லும் காலடித் தடங்கள், பனி உருகும் போது விரிவடையும், அதனால் அவை பெரிய கால் தடங்களாகத் தோன்றும் என்று விஞ்ஞானிகள் இந்தக் கால்தடங்களுக்கு விளக்கம் கொடுக்கின்றனர்.

ஆனாலும் இன்றும் நேபாளம், திபெத், இந்தியாவின் பல பகுதிகளில் எட்டி குறித்த நம்பிக்கைகள் வலுவாக உள்ளன. எட்டி குறித்து 1954ல் தி ஸ்நொ கிரியேசர், 1957ல் தி அபோமினபிள் ஸ்நோமேன், 2001ல் மான்ஸ்டர்ஸ் இன்க், 2008ல் தி மம்மி: டூம் ஆஃப் தி டிராகன் எம்பரர் போன்ற கணிசமான திரைப்படங்களே வெளிவந்துள்ளன. எட்டி – உண்மையா? கற்பனையா? – என்பதைக் காலம்தான் கூற வேண்டும்.

 

Exit mobile version