2ஜி ஊழலால் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா, சிபிஐ விசாரணை பற்றி விமர்சிப்பது வினோதமாக உள்ளது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலின் சாத்தான்குளம் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் சிபிஐ விசாரணை கோரும் போது, அக்கட்சியை சேர்ந்த ஆ.ராசா மட்டும் சிபிஐ விசாரணை வேண்டாம் என பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார். தம்முடைய இந்த கருத்தை ஆ.ராசா, திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்புதலோடு வெளியிட்டாரா? அல்லது அவரே சொந்தமாக வெளியிட்டாரா? எனக் கேள்வி எழுப்பிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஆ.ராசா CBI விசாரணையை எதிர்ப்பது அரசியல் பித்தலாட்டம் எனக் கடுமையாக சாடியுள்ளார். நீதிமன்ற ஒப்புதலோடு, வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்படும் என முதலமைச்சர் தெளிவுபடுத்தியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சாத்தான்குளம் வழக்கை தமிழக அரசு சரியான திசையில் விசாரிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தம்முடைய எரிச்சலை இவ்வாறு வெளிப்படுத்தியிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது என்றும் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலால் தமிழகத்திற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய ஆ.ராசா மற்றும் திமுகவினர் பற்றி மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் விமர்சனம் செய்துள்ளார்.