வரும் காலங்களில் கொரோனாவை விட கொடூர நோய் வரப்போகிறதா?

கொரோனா வைரசை காட்டிலும் மிக மோசமான தொற்று நோய்கள் வருங்காலத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஒன்றரை ஆண்டுகள் வரை ஆகும் என கூறியுள்ள ஆய்வாளர்கள், கொரோனா வைரஸுடன் வாழ அனைவரும் பழகிக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், எதிர்காலத்தில் புதிதாக வேறு சில நோய்களும் ஏற்படும் வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரசைக் காட்டிலும் அவை அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்டுதோறும் தொடர்ந்து புதிய நோய்கள் உருவாகி வருவதாகவும், அவற்றில் பல தொற்றுநோயாக உருவெடுப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது புதிதாக என்ன நோய்கள் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து ஆய்வு நடத்தி வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக பேசிய லிவர்போல் (liverpool) பல்கலைக்கழக பேராசிரியர் மத்தேயூ பேலிஸ், கடந்த 20 ஆண்டுகளில் SARS, MERS, Ebola, பறவை காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட 6 பெரிய நோய்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். சராசரியாக ஒவ்வொரு 4 மாதங்களுக்கும் ஒரு புதிய தொற்று நோய் மனிதர்களை தாக்குவதாகவும், ஆசியா அல்லது ஆப்பிரிக்காவில் மட்டுமல்ல, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலும் புதிய நோய்கள் ஏற்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

21ஆம் நூற்றாண்டில் முதலில் தோன்றிய பெரும் தொற்று நோயான பன்றிக் காய்ச்சல், பன்றிகளை ஏற்றுமதி செய்ததன் காரணமாக அதிகளவில் பரவியது. கொரோனா போன்றே அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய சார்ஸ் நோய், பயணங்கள் வழியாக அதிகம் பரவியது. உலகமயமாதலுக்கு பின் தோன்றிய முதல் பெரிய நோய் இது என உலக சுகாதார நிறுவனத்தின் பிராந்திய தலைவர் Shigeru omi தெரிவித்தார்.

இவ்வாறு கடந்த சில தசாப்தங்களாக பெரும் தொற்று நோய்கள் உருவாகி மனித இனத்தை அதிகளவு பாதித்து வருகின்றன. இந்த நோய்கள் பெரும்பாலும் விலங்குகள் மற்றும் பறவைகள் இடம் தோன்றி, பின்னர் மனிதர்களுக்கு பரவுகின்றன. நான்கில் மூன்று நோய்கள் இந்த வகையில்தான் பரவுவதாக, அமெரிக்க நோய்கள் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இயற்கையுடன் நமக்கு இணக்கமான போக்கு இல்லாததே இதற்கு காரணம் என, லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் கேட் ஜோன்ஸின் குற்றம்சாட்டியுள்ளார். காடுகள் அழிப்பு, வனப் பகுதிகளில் அத்துமீறல் உள்ளிட்டவை நோய்கள் பரவ முக்கிய காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிவெட் பூனைகளிடம் இருந்து சார்ஸ் நோயும், ஒட்டகங்களிடம் இருந்து MERS நோயும், குதிரைகளிடம் இருந்து ஹேந்திரா என்ற நோயும், பன்றிகளிடம் இருந்து நிபா வைரஸ் தொற்றும், சிம்பன்சிகளிடம் இருந்து எச்.ஐ.வி தொற்றும் பரவியதை ஆய்வாளர் சுட்டிக்காட்டுகின்றனர்.இந்நிலையில், இயற்கை மீதான மனிதர்களின் தொடர் அத்துமீறல் காரணமாக, கொரோனாவை காட்டிலும் பெரிய தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நமது வாழ்நாளிலேயே மற்றொரு பெரிய தொற்று நோயை காணும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version