தேய்பிறை ஆகிறதா காங்கிரஸ்?

தேசத்தந்தை காந்தியடிகள் தலைமை வகித்த கட்சி… இப்படிப் பல பெருமைகளைக் கொண்ட காங்கிரஸ், இன்று தனக்கு யாராவது விடுதலை வாங்கித்தர மாட்டார்களா? என்று ஏங்கிக்கொண்டிருக்கும் பரிதாப நிலைக்கு ஆளாகியிருக்கிறது…

1951 -52 ம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதலாவது பொதுத் தேர்தலில் வரலாற்று வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தது. நேரு தலைமையிலான அரசு, ஆட்சியை மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியையும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று வம்சாவளியாக காங்கிரஸ் கட்சி நிர்வகிக்கப்பட்டு வந்தாலும் தன் கட்டுக்கோப்பை இழந்துவிட்டதோ என்ற கேள்வி மக்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

ஒட்டு மொத்த இந்தியாவையே கட்டி ஆண்டுவந்த காங்கிரஸ் கட்சி, இன்று சட்டிஸ்கர், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய வெறும் நான்கே மாநிலங்கள் மற்றும் ஒரேஒரு யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மட்டுமே ஆட்சியை தக்கவைத்துள்ளது… அதுவும் மாநிலக் கட்சிகளின் ஆதரவை நம்பி…

ஒரு கட்சியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகிகளும், தொண்டர்களும் தலைமையை நாடிச் செல்வார்கள், ஆனால், சரியான தலைமையே இல்லாமல் தவித்து வரும் காங்கிரஸ் கட்சியில், யாரை நாடிச் செல்வார்கள் நிர்வாகிகள்?

காங்கிரஸ் என்று சொன்னாலே, அனைவர் நினைவுக்கும் வருவது கோஷ்டிப் பூசல்தான்… இப்படி உட்கட்சியில் ஏற்படும் கோஷ்டிப் பூசல்களைக் களைவதே தலைப்பாடான பிரச்சனையாக இருக்கும்போது, அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தக்கவைப்பதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும்போது, பின் எப்படி இந்தியா முழுக்க அதீத பலம்பொருந்திய கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை வீழ்த்துவது? ஆட்சியை பிடிப்பது? ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு அது கனவாகவே போய்விடுமோ? என்று உட்கட்சிக்காரர்களே ஆற்றாமையை வெளிப்படுத்துகின்றனர்…

மத்தியப்பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவால் சோதனை, ராஜஸ்தானில் சச்சின் பைலட்டால் பரிதவிப்பு என்று அரசியல் சதுரங்கத்தில் தடுமாறி வருகிறது. கர்நாடகா, மத்தியபிரதேசம் என்று சில மாநிலங்களில் ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே ஆட்சியை இழந்திருந்தது காங்கிரஸ். இதற்கான காரணங்களையும், சரி செய்யப்படவேண்டிய குறைகளையும் நிவர்த்தி செய்ய காங்கிரஸ் தவறிவிட்டதோ என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்…

Exit mobile version