பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என வெளிப்படையாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி தயாரா? என ஜார்க்கண்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கான 5ம் கட்ட தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக போக்நாதி பகுதியில் பாஜக சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, குடியுரிமை சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக காங்கிரஸ் தொடர்ந்து பொய் கூறி வருவதாகவும், நாட்டிலுள்ள முஸ்லீம்களுக்கு எதிராக இச்சட்டம் உள்ளதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியினர் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானியர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவோம் என்று வெளிப்படையாக அறிவிக்க காங்கிரஸ் கட்சி தயாரா? என பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனநாயக முறைப்படி, நாட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்த நகர்புற நக்சல்வாதிகள் இளைஞர்களை தூண்டிவிட முயற்சித்து வருகின்றனர் எனவும், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் தங்கள் கருத்துக்களை ஜனநாயக முறைப்படி அரசிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி கேட்டுகொண்டார்.