நாயகி இயல் (அம்ருதா ஸ்ரீனிவாசன்) பிரபல எழுத்தாளர். தனது எழுத்துக்கள் எப்போதும் யதார்த்தமானதாகவும், உண்மைக்கு மிகஅருகில் இருக்க வேண்டும் என்பதிலும் மிக தெளிவாக இருப்பவர்.
அதற்காக அவர் எந்த எல்லைக்கும் சென்று தனது கதைகளின் பாத்திரமாகவே வாழ்ந்து பார்க்கும் துணிச்சல் மிக்கவர். இந்த குணமே அவரை மரணத்திற்கு அழைத்து செல்கிறது.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே இயல் கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை பற்றி விசாரித்து, குற்றவாளியை கண்டுபிடிக்கும் வேலையில் இறங்குகிறது இன்ஸ்பெக்டர் குமார் (ராஜேஷ் பாலசந்திரன்) தலைமையிலான போலீஸ் டீம்.
உண்மைக் கொலையாளி யார், எதற்காக இயல் கொலை செய்யப்படுகிறார்?, ஆகிய கேள்விகளுக்கு விடைதேடி விரிகிறது மீதிக் கதை.
சுவாரஸ்யமான சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லர் நாவலை படித்த உணர்வை ஏற்படுத்துகிறது ‘இறுதி பக்கம்’. தனது கதையின் மீதான அதீதி நம்பிக்கையினால், புதுமுகங்களை வைத்து படத்தை எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மனோ வெ. கண்ணதாசன்.
முதல் படம் என்பதை நம்ப முடியாத வகையில் மிக நேர்த்தியாக திரைக்கதை அமைத்திருக்கிறார் மனோ. கொலையாளி யார் என்பதை பார்வையாளர்கள் எளிதில் கணித்துவிட முடியாதபடி பல திருப்பங்கள் வைத்து அசத்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்துள்ள மற்றொரு நல்ல படைப்பாளி மனோ என்பதில் சந்தேகமில்லை.
படத்தின் நாயகன் ராஜேஷ் பாலசந்திரன் தனது யதார்த்தமான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான போலீஸ் அதிகாரிகளை போல் இல்லாமல், அவரது நடிப்பு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்துகிறது.
இயலாக நடித்துள்ள அம்ருதாவுக்கு இது சவாலான கதாபாத்திரம். படத்தில் அவருக்கு இரண்டு காதலர்கள். ஸ்ரீ ராஜுடன் ‘Living together’ல் இருக்கிறார். அதேநேரம் தன்னுடன் கல்லூரியில் படித்த விக்னேஷ் சண்முகத்தையும் காதலிக்கிறார்.
காமத்துக்கும் காதலுக்கு எந்த சம்பந்தமும் இல்லை எனும் கொள்ளை கொண்ட பாத்திரம். தனது பாத்திரத்தின் தேவையை குறைவில்லாமல் பூர்த்தி செய்திருக்கிறார் அம்ருதா. இவர்களைப் போலவே, பெண் போலீசாக நடித்துள்ள கிரிஜா ஹரி, சுபதி ராஜ் ஆகியோரும் கவனம் ஈர்க்கின்றனர்.
ஜேம்ஸ் ரூபர்ட்டின் இசையும், பிரவீன் பாலுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். காட்சிகளை சரியாக கத்தரித்து படத்தை தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார் எடிட்டர் ராம் பாண்டியன்.
இறுதி பக்கம்.. நல்ல திரைப்படங்களுக்காக ஏங்கிதவிக்கும் சினிமா ரசிர்களின் தாகத்தைத் தணிக்கும்!