ஈராக் கலவரங்கள்: 100ஐ தாண்டியது உயிரிழப்பு

ஈராக்கில் 6ஆம் நாளாகத் தொடரும் மக்கள் போராட்டங்களாலும், பல்வேறு இடங்களில் நடந்த கலவரங்களாலும் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு இன்று தெரிவித்து உள்ளது.

ஈராக் நாட்டில் பிரதமர் அதில் அப்துல் மஹதி தலைமையிலான அரசு கடந்த ஓராண்டாக ஆட்சி செய்து வருகிறது. நிர்வாகத் திறன் குறைபாட்டால் தொடக்கம் முதலே இந்த அரசு கடும் நெருக்கடிகளை சந்தித்து வந்தது. வேலைவாய்ப்பின்மையும் ஊழலும் ஈராக்கின் பிரதான பிரச்னைகளாகின.

 இந்நிலையில் கடந்தவாரம் ஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் அரசுக்கு எதிராக நடந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் 8 மக்கள் உயிரிழந்தனர். இது போராட்டக்காரர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் ஈராக்கின் பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் வீதிக்கு வந்தனர். பல்வேறு இடங்களில் கலவரங்களும் துப்பாக்கிச் சூடுகளும் நடந்தன. 

 நேற்று ஈராக் அரசு வெளியிட்ட தகவல்களின்படி, இந்த வன்முறைகளில் மொத்தம் 99 போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். ஈராக் அரசின் அறிவிப்பை அடுத்து, ஐநா சபை ஈராக் அரசுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தது, ’பலிகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்’ – என்றும் வலியுறுத்தியது. உலகின் பல்வேறு நாடுகளும் தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்திருந்தன. உடனே ஈரான் பிரதமர் மஹதி அந்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்தார், ஆனாலும் போராட்டங்கள் ஓயவில்லை.

 அந்நிலையில், ஈராக் அரசு இன்று வெளியிட்டுள்ள தகவல்கள் போராட்டத்தில் 104 பேர் உயிரிழந்ததையும், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததையும் உறுதி செய்துள்ளன. காயமடைந்தவர்களில் 1000 பேர் காவல் துறையினர் ஆவர். சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கக் கூடும் – என்று அச்சம் தெரிவித்ஹு உள்ளன.

 ஏற்கனவே கடும் பொருளாதார நெருக்கடியில் உள்ள ஈராக் மக்கள், இந்த வன்முறையினால் இன்னும் மோசமான பாதிப்புகளை சந்திப்பார்கள். கடந்த 6 நாட்களாக நடந்துவரும் போராட்டங்களில் உயிரிழப்புகள் தொடர்வது சர்வதேச அரசியல் பார்வையாளர்களைக் கவலைக்கு உள்ளாக்கி உள்ளது.c

Exit mobile version