அமெரிக்கா, பெறுப்புடன் நடந்து கொள்ளாவிட்டால் மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும்- ஈரான்

அமெரிக்க அரசு பொறுப்புடன் நடந்து கொள்ளா விட்டால் மிகப் பெரிய விளைவை சந்திக்க நேரிடும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. இந்த பிரச்சினை இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. இந்த சூழலில் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் உடனடியாக அதை திரும்பப்பெற்றார். இதையடுத்து ஈரான் புரட்சிகர ஆயுதப்படையின் ஆயுத கட்டுப்பாட்டு கணினிகள் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஈரானின் ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை ஏவும் அமைப்புகளின் கட்டுப்பாட்டு கணினிகள் பாதிக்கப்பட்டதாகவும், அவை மீண்டும் பயன்பாட்டுக்கு வர குறிப்பிட்ட காலம் ஆகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஈரான் படைப் பிரிவுகளை பார்வையிட்ட, அந்த நாட்டு ராணுவ மூத்த அதிகாரியான, மேஜர் ஜெனரல், கோலமாலி ரஷீத், அமெரிக்க அரசும், அதன் ராணுவமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும், தங்கள் நாட்டு மக்களையும், ராணுவத்தினரையும் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என கூறினார். தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டால், அதற்காக மிகப் பெரிய விலையை அமெரிக்கா கொடுக்க நேரிடும் எனவும் அவர் எச்சரித்தார்.

Exit mobile version