ஈராக்கில் அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது முட்டாள்தனமான செயல் என ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் சரீப் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் விமான நிலையத்துக்குக் காரில் சென்ற ஈரானிய படைத்தளபதி காசிம் சுலைமான் உட்பட முன்னணி வீரர்கள் 25 பேர் அமெரிக்கா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே ஈரான் – அமெரிக்கா இடையே பகை நிலவி வரும் நிலையில், இந்தத் தாக்குதலால், மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது.
தாக்குதல் தொடர்பாக ஈரானில் அமெரிக்காவின் முகவராக உள்ள சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைக் கண்டித்துச் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் சரீப், அமெரிக்காவின் செயல் உலகளாவிய பயங்கரவாதம் எனத் தெரிவித்தார்.
இது மிகவும் ஆபத்தானதும் முட்டாள்தனமான செயலும் ஆகும் எனக் குறிப்பிட்டார். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு அமெரிக்க அரசே முழுப் பொறுப்பாகும் எனவும் ஜாவத் சரீப் தெரிவித்தார்.