ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 11வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பெங்களூர் அணிகள் மோதின.
ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தொடக்க வீரர்களாக களமிறங்கிய வார்னரும், பியர்ஸ்டோவும் பெங்களூர் அணியின் பந்துவீச்சை விளாசித்தள்ளினர். பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசிய இருவரும் சதமடித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த இணை 185 ரன்கள் குவித்தது. பியர்ஸ்டோ 114 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்தது. வார்னர் 100 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி வீரர்கள் வெற்றி பெற்று ஆக வேண்டிய கட்டாயத்தில் அடித்து ஆட நினைத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ஒரு கட்டத்தில் அந்த அணி 35 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த வீரர்கள் கொஞ்சம் அடித்து ஆட 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் இந்த தொடரின் 2வது வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி 4 விக்கெட்டுகளையும், சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதே சமயம் பெங்களூர் அணி இந்த தொடரில் விளையாடிய மூன்று ஆட்டங்களிலும் தோல்வியை தழுவியுள்ளது குறிப்பிடத்தக்கது.