கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரின் 16வது போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை, டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

துபாயில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா, தவான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக ஆடிய ப்ரித்வி ஷா 66 ரன்களிலும், தவான் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். இறுதியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 228 ரன்கள் குவித்தது.

229 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் 3 ரன்னில் ஆட்டமிழந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 28 ரன்களிலும், ராணா 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி 5 ஓவர்களில் 92 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், இயன் மோர்கன் மற்றும் திரிபாதி ஜோடி டெல்லி அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து கொல்கத்தா அணிக்கு நம்பிக்கை அளித்தனர். மோர்கன் 44 ரன்களிலும், திரிபாதி 36 ரன்களிலும் ஆட்டமிழந்த நிலையில், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆட்டநாயகனாக டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார்.

Exit mobile version