ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பெங்களூர் அணியின் சார்பில் துவக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் விராட் கோலியும், பார்திவ் படேலும் களமிறங்கினர்.
அந்த அணியின் விராட் கோலி 23 ரன்னிலும், டி வில்லியர்ஸ் 13 ரன்னிலும், ஹெட்மையர் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பார்திவ் படேல் தனது அரை சதத்தினை பதிவு செய்தநிலையில் 67 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ஸ்டோனிஸ் 31 ரன்களும், மொயின் அலி 18 ரன்களும் எடுத்தனர். பெங்களுர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்தது.
ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியில் ரஹானே 22 ரன்களும் பட்லர் 59 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து ஸ்மித் 38 ரன்களில் வெளியேறினார். இறுதியில் ராகுல் திரிபாதி 34 ரன்கள் குவித்து வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.
முடிவில் ராஜஸ்தான் அணி 19.5 ஒவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து 4 வது தோல்வியை சந்தித்தது. ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.