ஐபிஎல் சீசனில் நேற்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தகுதிசுற்றுக்கு முன்னேறியது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்றில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. டாசில் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய ஹைதரபாத் அணியின் தொடக்க ஆட்டக்கார் விரித்திமன் சாகா 8 ரன்னில் வெளியேற பின்னர் வந்த வீரர்கள் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து ஹைதராபாத் அணி 162 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மார்டின் குப்டில் 19 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார்
இதனை தொடர்ந்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்திவி ஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ஷிகர் தவான் 17 ரன்களை எடுத்திருந்தபோது விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேற, பின்னர் வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் சொற்ப ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிவந்த பிரித்திவ் ஷா அரை சதமடித்திருந்த நிலையில் 56 ரன்னில் கலீல் அகமது பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இறுதியாக 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 19.5 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டி த்ரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக அதிரடியாக விளையாடிய ரிஷப் பந்த் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி வெளியேற்றுதல் சுற்றிலிருந்து தகுதி சுற்றிற்கு முன்னேறியது. இதனையடுத்து வரும் 10 ஆம் தேதி சென்னை அணியுடன் டெல்லி அணி மோதவுள்ளது.