ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கார்த்தி சிதம்பரத்தின் எம்.பி பதவி பறிபோகும்

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிரான ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு, எம்.பி, எம்.எல்.ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் செல்வாக்கை பயன்படுத்தி ஐ.எஸ்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு சட்ட விரோதமாக அன்னிய செலாவனி அனுமதியை கார்த்தி சிதம்பரம் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ப.சிதம்பரம் மீதும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் சிபிஐ, அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றன.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றார். இதனையடுத்து அவர் மீதான ஐ.என்.எஸ் மீடியா முறைகேடு வழக்கு டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்திலிருந்து எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கு விசாரணை விரைவுபெறும் என்பதால் கார்த்தி சிதம்பரம் தரப்பினர் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கார்த்தி சிதம்பரத்தின் எம்.பி பதவி பறிபோகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version