பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு!

ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தை தொடர்ந்து மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கும் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால், தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பயிர்களை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்துக்கு படையெடுத்தன. இந்த நிலையில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகள் முகாமிட்டுள்ளன. நேற்று மட்டும் பல்வேறு மாநிலங்களின் 303 பகுதிகளில், சுமார் 47 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் தடுப்பு மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், அந்தந்த மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். வெட்டுக்கிளிகளை விரட்டும் வகையில், ட்ரோன்கள் மூலம் கிருமிநாசினிகளை தெளிக்கும் பணியும் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு வெட்டுக்கிளிகளின் தாக்கம் உள்ளதாகவும், அவற்றை கட்டுப்படுத்தும் பணியை துரிதமாக மேற்கொண்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version