போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்களே படம் மற்றும் காணொலியாக எடுத்து புகாரளிக்க வகை செய்யும், புதிய வகை ஆண்ட்ராய்டு செயலியை, மாநகர காவல் ஆணையாளர் ஏ.கே.விசுவநாதன் அறிமுகப்படுத்தினார்.
போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கும் வகையிலான 352 அதி நவீன இ-சலான் இயந்திரங்கள் மற்றும் பொதுமக்கள், மற்றும் காவல் அதிகாரிகள் பயன்படுத்தும் GCTP ஆண்ட்ராய்டு செயலியை, சென்னை மாநகர காவல்துறை ஆணையாளர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகப்படுத்தினார். சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், இ-சலான் இயந்திரங்கள் மூலம் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரை செய்ய வசதி உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும், தேசிய அளவிலான வாகனங்களுடைய தகவல்கள் மற்றும் அதன் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள், அந்த இ-சலான் இயந்திரத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும் என்றும் கூறினார். அதேபோல் போக்குவரத்து விதிமீறல்களை பொதுமக்களே படம் மற்றும் காணொலியாக எடுத்து புகாரளிக்க வகை செய்யும், GCTP ஆண்ட்ராய்டு செயலியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.